திருவண்ணாமலை: படைவீடு அடுத்த கேசவபுரம் கிராமத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேரந்த வென்று மண்கொண்டான் எனும் ஏகாம்பரநாத சம்புவராயரின்பள்ளிப்படை கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு அடுத்த கேசவபுரம் கிராமத்தில் கமண்டல நதிக்கரையில் காளியம்மன் கோயில் கருவறையில் ஒரு சிற்ப தொகுதியும், அதன் எதிரே ஒரு நடுகல்லும் இருப்பதை கண்டறிந்து சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் அ.அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து முனைவர் அ.அமுல்ராஜ் கூறும்போது, “கேசவபுரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள சிற்ப தொகுதி முக்கியமான வரலாற்று சான்றாகும். இந்த சிற்பம் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வென்று மண்கொண்டான் எனும் ஏகாம்பரநாத சம்புவராயரின் பள்ளிப்படை கோயிலாகும். சம்புவராய மன்னர்களில் தனியரசை 1322-ல் அமைத்தவர் வென்று மண்கொண்ட சம்புவராயர் ஆவார். சம்புவராய மன்னர்களில் மிகவும் புகழ்பெற்று ‘சகலலோக சக்கரவர்த்தி’, ‘சென்ற திசை வென்றான்’ போன்ற பல்வேறு பட்டங்களை பெற்றவர். இவரது தனியரசு 1339 வரை நிலைத்திருந்தது” என்றார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் கூறும்போது,“கேசவபுரம் கிராமத்தில் காளியம்மன் கோயில் கருவறையில் உள்ள சிற்பம், வென்று மண்கொண்டா னின் பள்ளிப்படை கோயில் சிற்பங்களாகும். மன்னனும், அவரது தேவியர்களும் வரிசையாக அமர்ந்துள்ளனர். 2 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஒரு அழகிய திருவாசி அலங்கரிக்க, அதன்கீழ் வென்று மண்கொண்டான் கம்பீரமாக சடைமுடித்த கொண்டையுடனும் முகத்தில் அழகான மீசையுடனுமாக அமர்ந்துள்ளார்.
அவருக்கு பக்கத்தில் வலதுபுறம் இருவரும், இடதுபுறம் மூவருமாக ஐந்து மகளிர் வணங்கிய நிலையில் உள்ளனர். இவர்கள் பட்டத்து ராணியும், துணைவியருமாக இருக்கக்கூடும். இவர்களுக்கு மேற்புறமாக சாமரம் வீசியபடி ஒரு பணிப்பெண்ணும், அரசனுக்குரிய வெண்கொற்றக் குடையும் உள்ளன. மேலிரு விளிம்புகளில் வாள் மற்றும் உலகின் கண் மறையாத சூரியனும் இடம்பெற்றுள்ளது.
மூலவர் அறைக்கு எதிரே, இச்சிற்பத்துக்கு எதிர் திசையில் மூவர் நிற்கும் நடுகல் சிற்பம் ஒன்றுள்ளது. இது, மன்னரை அரசியர்கள் வணங்குவது போல உள்ளது. இப்பள்ளிப்படை சிற்பத்தின் பின்னால், சுதையினால் காளிதேவியின் உருவத்தை அமைத்து, காளிகோயில் என தற்போது அழைத்து வருகின்றனர். பள்ளிப்படை கோயில் என்பது மன்னனை புதைத்த அல்லது எரித்த இடத்தின் மீது கட்டப்பட்டதாகும். வென்று மண்கொண்ட சம்புவராயர் படைவீட்டில் இயற்கை எய்தினார். அவரது, உடல் கேசவபுரம் கிராமத்துக்கு அருகில் ஓடுகின்ற கமண்டல நதிக்கரையில் எரியூட்டப்பட்டது.
இந்த எரிசாம்பலை கங்கை நதியில் கரைப்பதற்காக, அவரது மகன் ‘முதலாம் ராஜநாராயண சம்புவராயன்’ தமது அமைச்சர் மாதையனை அனுப்பி வைத்தார். அவர், அங்கு சென்று எரிசாம்பலை கரைத்துவிட்டு திரும்பியபின், ஆரணிக்கு கிழக்கே ‘குட்டியம்’ என்ற ஊரில் பெருமளவில் நிலத்தை பரிசாக அளித்து, அவருக்கு ‘கங்கையாடி மாதையன்’ என்ற பட்டத்தையும் வழங்கி சிறப்பித்தார். இந்த செய்தியைக் குட்டியம் கிராமத்தில் மாதையன் எழுப்பிய ‘ஏகாம்பர ஈஸ்வரர் திருக்கோயில்’ கல்வெட்டு தெரிவிக்கிறது.
அக்காலத்தில் மன்னர், வென்று மண்கொண்ட சம்புவராயர் எரியூட்டப்பட்ட இடத்தில்தான் பள்ளிப்படை கோயில் அமைந்துள்ளன. இக்கோயில் காலப்போக்கில் சிதைந்து அழிந்தன. இக்கோயிலின் கற்களைக் கொண்டே அருகில் உள்ள அலியாபாத் அணைக்கட்டை 1869-ல் ஆங்கிலேயர்கள் கட்டிமுடித்துள்ளனர் என கருதமுடிகிறது.
தற்போது காளியம்மன் கோயிலாக வழிபடும் இக்கோயில் கட்டப்பட்டதைபற்றி கேசவபுரம் கிராமத்தில் வசிக்கும் விஜயராகவன் (65) என்பவர், “இக்கோயிலைக் கட்ட நாங்கள் அஸ்திபாரம் தோண்டிய போது, மண்ணுக்கு அடியில் நிறைய எரிசாம்பல் இருந்தது. இப்போதும் இதற்கு அடியில் உள்ளது” எனக் கூறுகிறார்.
இந்த வாய்வழி தகவலும் மேற்கண்ட வரலாற்று நிகழ்வுகளுக்கு மிக முக்கிய ஆதரமாக உள்ளது. ராஜராஜ சோழனுக்கு கும்பகோணத்துக்கு அடுத்த உடையாளூரிலும், அவரது மகன் ராஜேந்திர சோழனுக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசத்திலும் பள்ளிப்படை கோயில் அமைக்கப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சோழ அரசர்களின் நம்பிக்கைக்கு உரிய சிற்றரசர்களாக இருந்த சம்புவராய மன்னர்களின் தலைநகரமாக, படைநகரமாக இடைக்காலத்தில் சிறப்புற்று இருந்த படைவீட்டில் சம்புவராய மன்னரின் பள்ளிப்படை கோயில் எழுப்பப்பட்டிருந்தது என்பதற்கான முக்கிய வரலாற்று சான்றுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.