புதுடில்லி : பயணி கொடுத்த 500 ரூபாய் நோட்டை மறைத்து விட்டு, 20 ரூபாய் கொடுத்ததாக ஏமாற்றிய ரயில்வே ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் சமீபத்தில் ஒரு பயணி,500 ரூபாய் நோட்டை கொடுத்து குவாலியர் செல்ல டிக்கெட் கேட்டார்.
அந்த 500 ரூபாய் நோட்டை வாங்கிய டிக்கெட் கவுன்டர் ஊழியர், 20 ரூபாய் தான் கொடுத்ததாக வாக்குவாதம் செய்து, டிக்கெட்டுக்கு மேலும், 125 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
பயணி 500 ரூபாயை கொடுத்தவுடன் சட்டென்று அதை தன் காலடியில் போட்டு விட்டு, தன் மற்றொரு கையில் வைத்திருந்த 20 ரூபாயை பயணி கொடுத்த ரூபாய் நோட்டு என, ரயில்வே ஊழியர் வாக்குவாதம் செய்தது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. ரயில்வே ஊழியருக்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்களை ஏமாற்றும் ரயில்வே ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய வடக்கு ரயில்வே கோட்ட மேலாளர், ‘சம்பந்தப்பட்ட ஊழியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement