புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் செய்து அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் தரப்பட்டது.
இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஒரே ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.பாலசுப்ரமணியன் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் பல்வேறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத் தனர். வெளிநாடு சென்றது, வீட்டில் ஏற்பட்ட துக்க சம்பவம் என பல்வேறு காரணங்களை மனுவில் குறிப்பிட்டிருந்த அவர்கள், இதனால் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியான் திவான் வாதிட்டார். அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி அரசின் கருத்தை அறிந்து வந்து நீதி மன்றத்தில் கூறியதாவது:
முடிவில்லாமல் போகும்: 2016 – 2022-க்கு இடையில், தேசிய பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான தனிப்பிரிவை மீண்டும் திறக்க இயலாது.அவ்வாறு திறந்தால் அது முடிவில்லா தன்மைக்கும் சட்டவிரோதப் பணம் உள்ளே நுழையவும் வழிவகுக்கும். இவ்வாறு அட்டர்னி ஜெனரல் கூறினார்.