தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 1038 இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பணியில் இல்லாதது தெரியவந்தது. இதனால் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் பட்டியல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இனி நடைபெறும் ஒவ்வொரு சிறப்பு முகாம் நாட்களிலும் பணிபுரியாத வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர்களில் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.