ஃபிஃபா கால்பந்து: மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்; பெல்ஜியத்தில் கலவரம்

ப்ரூசல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கார், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிலர் தீ வைத்தனர். இதனையடுத்து கலவரத் தடுப்பு போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ப்ரூசல்ஸ் மேயர் ஃபிலிஃப் க்ளோஸ், மக்கள் சிட்டி சென்டர் பகுதியில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கலவரத்தை கட்டுக்குள் வைக்க தேவைப்பட்டால் சப்வேக்கள் மூடப்படலாம். ட்ராம் போக்குவரத்தும் நிறுத்தப்படலாம் என்றார். இந்த தாக்குதலில் 2 போலீஸாரும் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக குரூப் ‘எஃப்’ பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம், மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இந்த போட்டி அல்-துமானா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடமும், ஃபிஃபா சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ள பெல்ஜியம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொராக்கோ அணியுடனான போட்டியில் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த போட்டியின் இரண்டாவது பாதியில் மொராக்கோ அணி வீரர் ரோமெய்ன் சாஸ், 73-வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் சக்காரியா மேலும் ஒரு கோல் போட மொராக்கோ அணி கெத்தாக வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் வீரர் அக்ரஃப் ஹக்கிமி, தனது தாயுடன் வெற்றியை கொண்டாடி இருந்தார். அந்த படம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.