திருவண்ணாமலை: இந்திரவனம் கிராமத்தில் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் முரளி கிருஷ்ணனுக்கு, பாமகவினர் ஆதரவு தெரிவித்துள்ளது.
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஊராட்சியில் ‘ஜல் ஜீவன்’ திட்ட பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, சமூக வலைதளத்தில் வீடியோ காட்சிகளை அதே கிராமத்தில் வசிக்கும் முரளி கிருஷ்ணன் என்பவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அவர்கள், திட்ட பணி தொடங்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஆகிறது என்றும், குழாய் புதைக்கும் பணி விரைவாக முடிக்கப்படும் என்றனர்.
மேலும், உள்நோக்கத்துடன் தவறான தகவலை சமூக வலைதளத்தில் பதிவு செய்த முரளிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்திரவனம் கிராமத்துக்கு மாவட்ட பாமக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கணேஷ்குமார் தலைமையிலான பாமகவினர் நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள், இளைஞர் முரளிகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் அவரிடம், ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு என துணிச்சலுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை பாராட்டுவதாகவும், பாமக துணை நிற்கும் என தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது, மாவட்டச் செயலாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.