உணவு டெலிவரிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்… சென்னையில் தொடக்கம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பிகாஸ் (BGauss), கோ சாப் (GoZap) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதன்படி, உணவு மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை டெலிவரி செய்யும் தனியார்  நிறுவன ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.  

டெலிவரி வழங்கும் ஊழியர்கள் அதிக தொலைவு வாகனம் ஓட்டுவதால், பேட்டரி சார்ஜ் செய்யும் சிக்கலை தவிர்க்க, செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பேட்டரி சார்ஜ் முடியும் தருவாயில் பதிவிட்டு தகவல் தெரிவித்தால் கோ சாப் நிறுவனம் உடனடியாக பேட்டரியை வழங்கி அவர்களது பணி பாதிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் கோ சாப் நிறுவனத்தின் கிளைகள் இயங்கி வருகின்றன.  இந்த செயல்பாடு மூலம் சென்னையில் உணவு டெலிவெரிக்காக இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவில் குறைக்கடும். 

இதுதொடர்பாக பேசிய பிகாஸ் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான ஹேமந்த் காப்ரா,”உலகத்தரம் வாய்ந்த எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை உருவாக்குவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்வது தங்களது நோக்கம்” என குறிப்பிட்டார். 

மேலும் பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்போடு தங்கள் இலக்கை எட்ட முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதற்காகவே பிகாஸ் நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, தரத்திலும் வடிவமைப்பிலும் மேம்பட்ட மற்றும் அனைத்து பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிகாஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். 

கோ ஃபியுவல் (Go Fuel) நிறுவனத்தின் அங்கமான கோ சாப் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முத்துராமன், “எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் இனிமேல் பேட்டரி சார்ஜ் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. எங்களை நாடினால் ஒரு நிமிடத்திற்குள் பேட்டரி மாற்றம் செய்து தரப்படும்” என தெரிவித்தார். தற்போது தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.