மதுரை: ”குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அதன் பிறகு குழந்தைகளைக் கண்காணிப்பதில்லை” என உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் லாட்டரிகளில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விளம்பரங்கள் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான சந்தை காளான் போல் பெருகி வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான செயலிகளுக்குள் எளிதில் நுழையும் வகையில் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி ஆகியன அதில் பங்கேற்போரை மன அழுத்தத்துக்கு தள்ளுவது, குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது, தற்கொலைக்கு தூண்டுவது போன்ற செயல்களை செய்கின்றன. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏராளமான குடும்பங்கள் சிதைந்துள்ளன. பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துளளனர்.
இந்நிலையில், 18 வயதுக்குள் குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டத்தால் குற்றவாளிகளாக மாறுவது அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் அதற்கான இணையதளங்கள் மற்றும் செயலிகளில் உள்நுழையும்போது வயதை உறுதிப்படுத்த ஆதார் கார்டு, பான் கார்டு பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி மற்றும் விளையாட்டுகள் எப்படி தெரியவந்தது. அரசுக்கு இருப்பதை விட பெற்றோர்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கின்றனர். அதன் பிறகு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை செலுத்துவதில்லை. கண்காணிப்பதும் இல்லை. அதுவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகும்” என்றனர்.
பின்னர் மனு தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர் மற்றும் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.