சீனாவை தவிர மற்ற நாடுகளில் பூஜ்ஜியத்தை நோக்கி செல்லும் கரோனா தொற்று: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவை தவிர மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நடந்த மெகா மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமைச்சர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அவர் அமைச்சரானால் மிகவும் மகிழ்ச்சி.

இந்திய விமான நிலையங்களில் கடந்த வாரம் வரை முகக் கவசம் அணிவது கட்டாயமாக இருந்தது. தற்போது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஊரடங்கை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை. பல நாடுகளில் முகக் கவசம் அணிவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை செய்வது, பாதிப்புகளை கணக்கெடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்தாலும், மற்ற நாடுகளில் கரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், முகக் கவசம் அணிவது பாதுகாப்பானது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 1.57 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1,800 அரசு, தனியார் மருத்துவமனைகளில் 1,513 நோய்களுக்கு முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மாரத்தான் ஓட்டம்: சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் மாரத்தான் (5 கி.மீ.) ஓட்டம் நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்து, மாரத்தானில் பங்கேற்று ஓடினர். துறை இயக்குநர் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.