“பில்கிஸ் பானு வழக்கு… மோடி, அமித் ஷா வெட்கப்பட வேண்டும்" – பிருந்தா காரத் காட்டம்

திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு பேசுகையில், “மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் திருப்பூர் ஆயத்த ஆடை, பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வால் ஆயத்த ஆடை தொழில் முடங்கியுள்ளது. இந்திய பருத்திக் கழகம் சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

திருப்பூர் பொதுக் கூட்டம்

கடந்த 5 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கான வராக்கடன் ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனத்தினர் கடன் பெற்று 90 நாள்களில் செலுத்தாவிட்டால், அதை வராக்கடனாக வைத்து அவர்கள் மீண்டும் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், பெரு நிறுவனங்கள் மீண்டும் கடன் பெறுகிறார்கள். மத்திய அரசு இந்த இரட்டை வேடத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மின்கட்டண உயர்வை திமுக அரசு திரும்ப பெற வேண்டும்.

Modi Amitsha

மத்திய அரசின் தோல்வியை மறைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் மக்களிடம் மதவாத உணர்வைத் தூண்டி விட்டு வருகின்றனர். நாட்டில் நாளொன்றுக்கு 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி, அமித் ஷா, இச்சம்பவத்தில் ஏதாவது சிறுபான்மையினர் ஈடுபட்டிருந்தால், அதை அரசியலாக்குகின்றனர். குஜராத்தில், வாக்கு அரசியலுக்காக பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை பாஜக அரசு விடுதலை செய்ததற்கு மோடியும், அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும்” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.