மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெரு பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான செவ்வேல் என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஊழியர்கள் சிலிண்டரை மாற்றும் பொழுது திடீரென எரி வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கடையில் சில இடங்களில் தீ பரவ தொடங்கியதை அடுத்து உடனடியாக அந்த பகுதியை முழுவதும் தண்ணீர் பிச்சை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பேக்கரி கடைக்கு செல்லக்கூடிய மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
அதேபோன்று மதுரை அடுத்த கோமதிபுரம் பாரதி தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியின் போது சமையலறையில் சிலிண்டர் ரெகுலேட்டர் மாற்றும் பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டது. அப்பொழுது திடீரென தீ பரவி வெடித்து சிதறிய போது எண்ணெய் சட்டி மற்றும் சமையல் பொருட்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாக்குளம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் காரணமாக கோமதிபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் உண்டானது. மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறிய சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து ஜெய்ஹிந்த்புரம் மற்றும் அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.