Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறாள். அவள் வாரத்துக்கு இரண்டு முறை பார்லியை உணவில் சேர்த்துக்கொள்கிறாள். பார்லி என்பது எல்லோருக்குமான உணவா? அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? எடையைக் குறைக்க உதவுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

நிறைய மருத்துவப் பலன்களைக் கொண்டது பார்லி. இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலமில்லாதபோது நார்ச்சத்து குறைவான, செரிமானத்துக்கு சிரமமில்லாத பார்லி கஞ்சியை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

சளி சவ்வுப் படலத்தில் புண்கள் இருந்தால் அவற்றை ஆற்றக்கூடியது பார்லி. அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் புரோபியானிக் அமிலம், கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் இதயநோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்கு பதில் பார்லி உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

உடலிலுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி. அதனால்தான் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் உள்ள நியாசின் எனும் வைட்டமின் பி சத்தானது மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியது. அந்த வயதில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியது.

மாதிரிப் படம்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் எக்ளாம்சியா எனும் பாதிப்புக்கும் பார்லி கஞ்சி பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கு ரத்தத்தில் புரதச்சத்து அதிகரித்து, கை, கால்கள் வீங்கும். அதை குணமாக்க பார்லி தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

பார்லியை வேகவைத்து அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். காலை தொடங்கி மதியம் வரை குடிக்கலாம். அது சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். அடிக்கடி சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் இது சிறந்த சிகிச்சை. எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் நிச்சயம் உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.