பதாயு, :எலி வாலில் கல்லைக்கட்டி சாக்கடையில் வீசி கொன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர், எலி வாலில் கல்லைக் கட்டி அதை சாக்கடையில் வீசி எறிந்தார். கல்லின் கனத்தினால் மேலே வரமுடியாமல் எலி தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்தது.
இறந்த எலியை சாக்கடையில் இருந்து எடுத்த விலங்குகள் நல ஆர்வலர் விகேந்திர சர்மா, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மனோஜ் குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இறந்த எலியின் உடல், பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து ஆய்வு முடிவு வந்ததும், மனோஜ் குமார் மீதான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என கூறப்படுகிறது.
எலி, விலங்குகள் பட்டியலில் சேராது என கூறப்பட்டதால், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்ய, போலீசார் முதலில் மறுத்தனர்.
ஆனால், எலி விலங்குகள் பட்டியலை சேர்ந்தது என மாவட்ட கால்நடை அதிகாரி உறுதி அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement