குழந்தைகள் மீது அக்கறை இல்லை பெற்றோருக்குத்தான் அரசை விட அதிக பொறுப்பு உள்ளது; ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை:  குழந்தைகள் மீது போதிய அக்கறை இல்லை. அரசை விட பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நெல்லை, பாளையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஆன்லைன் லாட்டரி மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கான சந்தையும் காளான்கள் போல அதிகரித்து வருகிறது. இதனால் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை மற்றும் குற்றவியல் சம்பவங்கள் உள்ளிட்ட தீய செயல்களே அதிகம் நடக்கின்றன. இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

18 வயதுக்கு கீழுள்ள பலர் ஆன்லைன் லாட்டரி மற்றும் விளையாட்டிற்கு அடிமையாகி, குற்றவாளிகளாக மாறும் சூழல் அதிகரித்துள்ளது. எனவே, 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆன்லைன் லாட்டரி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்பதை தடுத்திடும் வகையில், ஆன்லைன் லாட்டரி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை இணையதளம் மற்றும் செயலிகளில் உள்நுழையும்போதே, வயதை உறுதி செய்திடும் வகையில் ஆதார் அல்லது பான் கார்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் இருப்பது எப்படி தெரிய வந்தது? அரசுகளுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்குத் தான் உள்ளது. குழந்தைகள் மீது பெற்றோர்களுக்கு போதிய அக்கறை இல்லை. பெற்றோரின் நடவடிக்கைகளால்தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன’’ என்றனர்.
மேலும், மனுவிற்கு ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், ஒன்றிய நிதித்துறை செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.