கோடியில் கடன், அப்பாவின் குடிப்பழக்கம், பறிபோன இளம் பெண் பயிற்சி மருத்துவரின் உயிர்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி (58). இவர் விசாகப்பட்டினத்தில், கப்பலில் மீன் பிடிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவியும், மதுமிதா (26) என்ற மகளும் இருந்தனர். மகள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். 

லட்சுமிபுரம்

முதலில் மதுமிதா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்காக 50 லட்ச ரூபாய் செலவு செய்து படிக்க வைக்கப்பட்டுள்ளார். அந்தக் கல்லூரி தகுதி நீக்கப்பட்டதால் படிப்பு பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், செலவு செய்த பணமும் வீணானது. இதையடுத்து தான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மகளின் மருத்துவப்படிப்பு மற்றும் வீடு கட்டுவது என கோடிக்கணக்கான ரூபாய்க்கும் மேல் கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தச் சூழலில் நாராயணசாமி கடந்த 6 ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. கடன் பிரச்னையால் மதுபோதைக்கு அடிமையான அவர், எப்போதும் குடித்துவிட்டு மனைவி, மகளிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், சுமித்ரா பெற்றோர் கட்டிக்கொடுத்த வீட்டை விற்று பணம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். சம்மதிக்க மறுத்த சுமித்ராவை கொலை செய்வதாக மிரட்டி வந்துள்ளார். 

அரசு மருத்துவமனை

இதனால் மனமுடைந்த சுமித்ரா, மதுமிதா இருவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று கயிறு கட்ட தெரியாததால் தப்பியுள்ளார். இதையடுத்து கடைக்கு சென்று பூச்சி மருந்தை வாங்கி வந்து லோ சுகர் மாத்திரையுடன் சேர்த்துக் குடித்துள்ளனர். குடித்தவுடன் முதலில் மதுமிதா மயங்கி விழுந்ததை பார்த்த சுமித்ரா, கத்தி அலறியுள்ளார்.  

இதையறிந்த  அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மதுமிதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் மோசமான நிலையில் இருந்த சுமித்ராவுக்கு இனிமா கொடுக்கப்பட்டதில் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்கொலைக்கான காரணம் தனது தந்தை தான் என மதுமிதா எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில், பெரியகுளம் தென்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மருத்துவர் கனவோடு பயணித்துக் கொண்டிருந்த மகளின் உயிர் போக தந்தையின் மதுபழக்கம் காரணமாகிய சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ள உரிமையில்லை. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் – 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.