இந்தூர்: ‘‘ஒற்றுமை நடை பயணத்தால் எனக்குள் பொறுமை அதிகரித்துள்ளது” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடை பயணம், தற்போது மத்தியப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. சுமார் 2000கி.மீட்டரை கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று ராகுலின் நடைபயணம் இந்தூரை வந்தடைந்தது. 7வது நாளாக இந்தூர் மாவட்டத்தில் உள்ள சான்வெர் நகரில் இருந்து உஜ்ஜைனி நோக்கி நேற்று நடை பயணம் தொடங்கியது.
இந்நிலையில் ஒற்றுமை நடைபயணத்தின்போது திருப்திகரமான தருணம் குறித்து ராகுலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, ‘‘ஒற்றுமை பயணத்தால் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் உள்ளது. ஆனால் சுவாரசியமான சிலவற்றை பற்றி மட்டும் கூறுகிறேன். குறிப்பாக நடைபயணத்தின் காரணமாக எனக்கு பொறுமை அதிகரித்துள்ளது. இரண்டாவதாக, யாராவது என்னை இழுத்தாலும், தள்ளினாலும் நான் 8 மணி நேரத்துக்கு எரிச்சல் அடைய மாட்டேன். அது என்னை பாதிக்காது. இதற்கு முன் இரண்டு மணி நேரத்தில் நான் எரிச்சலடைந்துவிடுவேன். நீங்கள் நடைபயணத்தில் பங்கேற்றால் வலியை உணர்வீர்கள். ஆனால் நீங்கள் அந்த வலியை தாங்கிக்கொள்ள வேண்டும். விட்டுவிடக்கூடாது. மூன்றாவதாக, முன்பைவிடவும், மற்றவர்கள் கூறுவதை கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. என்னிடம் யாராவது வந்து பேசினால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பொறுமையாக என்னால் கேட்க முடிகின்றது” என்றார்.