‘மழை பெய்தால் சென்னை மக்கள் இனிமேல் கவலைப்பட மாட்டார்கள்.. ஏன்னா..’ – அமைச்சர் மா.சு.

மழை பெய்தால் இனிமேல் சென்னை மக்கள் கவலைப்பட மாட்டார்கள் என்றும், கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு அப்போதைய ஆட்சியாளர்களே அதற்கு காரணம் எனவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மின்சாரத் துறை சார்பில், சைதாப்பேட்டை தொகுதியில் 40 லட்சம் ரூபாய் செலவில் மின் விளக்குகள் ஒப்படைக்கும் நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்ரமணியன் “கடந்த ஆண்டு மழை பொழிந்து சென்னை முழுவதும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, மழை நீர் வடிகால் வசதி 5,000 கோடி ரூபாய் செலவில், முதல்வர் தொடர் ஆய்வு செய்து, அந்தப் பணிகள் முடிக்கப்பட்டது. இதனால் கடந்தமுறை பெய்த மழையால் பெரும் அளவில் பாதிப்பு இல்லை.
image
கடந்த 2015-ல் பெய்த மழை தான் மக்களுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் கொடுத்தது. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்தும் அப்போதைய அதிகாரிகள் துரிதமாக செயல்படுவதற்கு தயாராக இருந்த போதும் ஆட்சியாளர்கள் அலட்சியம் தான் சென்னை வெள்ளம் பெருக்கெடுக்க காரணம். அதுதான் மக்கள் மனதில் அச்சம் மிகப்பெரிய பாதிப்பாக மாற காரணமாக இருந்தது. இனி சென்னை மக்கள் மழை பெய்தால் பயப்பட மாட்டார்கள். மழை பற்றி இனி கவலை வேண்டாம். மழை பெய்ய வேண்டும், அதுதான் உயிர் ஆதாரம். சென்னை முழுவதும் மழை நீர் பாதிப்பு இருக்காது. சென்னை மக்கள், மழை மோசம் என்று கருதும் மனநிலை இனி இருக்காது.
தற்போது சென்னையில் சாலைகள் சிதிலமடைந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் மழையின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அதன் பின்னர் திட்ட மதிப்பின்படி சென்னை மாநகரம் முழுவதும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.