மோதலுக்கு முற்றுப்புள்ளி..! மீண்டும் 'கை'கோர்த்த அசோக் கெலாட் – சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் – சச்சின் பைலட் இடையே நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான
காங்கிரஸ்
கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சச்சின் பைலட். இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு, இளைஞர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். எதிர்பாராத இந்த அரசியல் நெருக்கடி காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. எனினும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் அமைதி ஆனார்.

இதற்கிடையே, அண்மையில், ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “சச்சின் பைலட் ஒரு துரோகி என்றும், அவர் என்றும் முதலமைச்சர் ஆக முடியாது” என்றும் தெரிவித்து இருந்தார். இந்தக் கருத்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இரு பெரும் சொத்துகள்” என குறிப்பிட்டார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணம் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 4 ஆம் தேதி நுழைய உள்ளது. தங்களது மாநிலத்திற்கு வரும் ராகுல் காந்திக்கு மாபெரும் அளவில் உற்சாக வரவேற்பு அளிக்க முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பார்வையிட்டனர்.

இதை அடுத்து, எதிரும் புதிருமாக இருந்த முதலமைச்சர் அசோக் கெலாட் – சச்சின் பைலட் ஆகியோர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், “நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனால், ராகுல் காந்தி எழுப்பிய பிரச்னைகளுக்கு மக்கள் முழுமையாக ஆதரவளிப்பதை யாத்திரையின் வெற்றி காட்டுகிறது,” என கூறினார்.

தொடர்ந்து பேசிய சச்சின் பைலட் கூறுகையில், “ராகுல் காந்திக்கு பெரிய அளவில் உற்சாகத்துடன் வரவேற்பு அளிப்போம். 12 நாட்கள் இந்த யாத்திரை ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கிறது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வர்,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.