Fasal bima yojana: 2 ஏக்கர் பயிர்கள் நாசம்.. 1.76 காசுகள் இழப்பீடு பெற்ற விவசாயி அதிர்ச்சி..!

மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி க்ருஷ்னா ராவுத் (32). இவர் தன்னிடம் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் சோயாபீன், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ரூ.25,000 செலவு செய்து பயிரிட்டுள்ளார். மேலும், இன்சூரன்ஸ் பிரீமியமாக 455 ரூபாயையும், பயிர் காப்பீடாக 200 ரூபாயையும் செலுத்தினார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் சேதமடைந்து அனைத்தும் வீணானது. இதனால் விவசாயி க்ருஷ்னா ராவுத் ‘பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் இழப்புக்கு விண்ணப்பித்திருந்தார். ஏக்கருக்கு 27,000 ரூபாய் இழப்பீடு வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு கிடைத்த இழப்பீடு தொகை அதிர்ச்சியாக இருந்தது.

மொத்தம் இரண்டு ஏக்கர் பயிர் சேதத்துக்கு அவருக்கு 1 ரூபாய் 76 காசுகள் மட்டுமே இழப்பீட்டு தொகை கிடைத்துள்ளது. இதேபோல, கஜானன் சவான் என்ற விவசாயியும் மேற்கண்ட நான்கில் மூன்று பயிர்களை போட்டுள்ளார். மழையால் அவை சேதமடைந்து இழப்பீடு கோரியபோது அவருக்கு ஏக்கருக்கு 14.21 ரூபாய், மற்றொரு ஏக்கருக்கு 1,200 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், அவர் இன்சூரன்ஸ் பிரீமியமாக 1,800 ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளார்.

அதே கிராமத்தில் உள்ள சில விவசாயிகளுக்கும் இதே நிலைதான். இதுகுறித்து புகார் எழுந்தபோது, இழப்பீடு குறித்து பரிசீலனை செய்து வருவதாக பர்பானி மாவட்ட ஆட்சியர் அஞ்சல் சூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; 5 லட்சம் விவசாயிகளுக்கு 160.9 கோடி ரூபாய் காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளுக்கு 88,000 விவசாயிகளுக்கு ரூ.33 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பர்பானியில் உள்ள 6.7 லட்சம் விவசாயிகள், 4.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பயிர்களுக்கு மொத்தம் ரூ.48.2 கோடி பிரீமியத் தொகையை தனியார் காப்பீடு நிறுவனத்தில் செலுத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.