Video : உள்ளே இருந்த ஜெகன் மோகனின் தங்கை… காரை அப்படியே தூக்கிச்சென்ற போலீசார்!

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ரெட்டி தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 

ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவராக உள்ளார். தெலங்கானாவின் தற்போதைய கேசிஆர் தலைமையிலான அரசை எதிர்க்கும் விதமாக, இவர் கடந்த 200 நாள்களுக்கு மேலாக இந்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில், நேற்று வாராங்கல் மாவட்டத்தின் நாஸாரம்பேட் பகுதியில் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டபோது, அவருடைய ஆதரவாளர்களுக்கும், கேசிஆர் கட்சியினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலை அடுத்து, ஷர்மிளா காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நேற்றே விடுவிக்கப்பட்டார். 

இதையடுத்து, நேற்றைய மோதலில், சேதமடைந்த அவரின் கார் ஒன்றை அவரே ஓட்டிச்சென்று, தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ரெட்டியின் குடியிருப்பு பகுதியில் இன்று நுழைய முயன்றார்.

இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சரின் குடியிருப்பு அமைந்துள்ள பிரகதி பவனில் போலீசார், ஷர்மிளாவின் காரை நிறுத்தி, அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். காரை விட்டு இறங்காமல் இருந்த ஷர்மிளா, அந்த இடத்தை விட்டும் போக மறுத்துள்ளார். 

இதனால், சம்பவ இடத்திற்கு கிரேன் ஒன்றை வரவழைத்த ஹைதராபாத் போலீசார், அவரை அப்புறப்படுத்தும் விதமாக, காரின் ஓட்டுநர் இருக்கையில் ஷர்மிளா இருக்கும்போதே, கிரைன் மூலம் காரில் கொக்கிப்போட்டு அப்படியே இழுத்துச்சென்றனர். இதனை அங்கிருந்தவர்கள் பலரும் வீடியோ எடுத்துள்ளனர். 

அந்த வீடியோக்கள் தற்போது வைரல்கள் ஆகி வருகின்றன. ஷர்மிளா ஓட்டுநர் இருக்கையில் இருப்பதும், கிரேன் மூலம் அவரின் காரை போலீசார் இழுத்துச்செல்வதும் அதில் பதிவாகியுள்ளது. நேற்று ஏற்பட்ட மோதலில், அந்த காரின் கண்ணாடி உடைந்திருப்பதும் வீடியோவில் தென்படுகிறது. 

கடந்த 223 நாள்களாக இந்த பாதயாத்திரையை தானும், தனது ஆதரவாளர்களும் அமைதியாக மேற்கொண்டு வருவதாகவும், மக்களிடைய தங்களின் செல்வாக்கு அதிகரிப்பதை விரும்பாத கேசிஆர் மற்றும் அவரது கட்சிக்காரர்கள் இதுபோன்ற மோதலில் ஈடுபடுவதாக நேற்றைய சம்பவத்திற்கு பின் ஷர்மிளா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.