அரசு வேலை ஆசைக்காட்டி பண மோசடி… முன்ஜாமீன் கேட்ட அதிமுக பிரமுகர்… ஐகோர்ட் முடிவு என்ன?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக விஜய நல்ல தம்பி இருந்து வந்தார். இவரிடம் தங்கதுரை என்பவர் டிரைவராக பணியாற்றஇ வந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் தங்கதுரையின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வாங்கித் தருவதாகவும், இதற்காக ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் தருமாறும் விஜய் தம்பி கேட்டுள்ளார். அதன் பேரில் நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை விஜய நல்ல தம்பியிடம் தங்கதுரை கொடுத்துள்ளார். அந்த பணத்தையும் பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகவும், வேலைக்காக பணம் கொடுத்ததை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அந்தத் தொகையை திருப்பி பெற்றுத் தருமாறும் கேட்டபோது, தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கத்துரையின் மனைவி கிருஷ்ணவேணி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதேபோல் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக விஜய நல்ல தம்பி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிவையில், இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மனுதாரருக்கு முன்ஜாமின் அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

தற்போதைய தமிழக மின் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சகணக்கான ரூபாய் பணத்தை பெற்று கொண்டு, ஏமாற்றிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வரும் இந்ச வழக்கு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிப்பு, திறமை, தகுதிக்கேற்ற வேலை என்பதை தாண்டி, எப்படியாவது அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற வெகுஜன மக்களின் மனநிலை காரணமாகதான், இவ்வளவு லட்சம் கொடுங்க… உங்களுக்கு அரசு வேலை நிச்சயம் என்ற ஆசை வார்த்தை காட்டி, பொதுமக்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏமாற்றுவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.