‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ மூலம் இடைத்தரகர்களுக்கே லாபம்: சென்னை மாமன்றக் கூட்டத்தில் கொந்தளித்த மதிமுக கவுன்சிலர் 

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ மிட்டா மிராசுதாரர்களுக்கு மட்டும் சிவப்பு கம்பளம் வீசுவதாக மதிமுக கவுன்சிலர் ஜீவன் குற்றம்சாட்டினார்.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டம் இன்று (நவ.29) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய 35-ஆவது வார்டு மதிமுக உறுப்பினர் ஜீவன், “2019-ம் ஆண்டு ‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’ கொண்டுவரப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக கழிவு நீர் இணைப்பு கொடுக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதில் இடைத்தரர்கள்தான் லாபம் பெறுகின்றனர்.

இந்தத் திட்டத்தின்படி கழிவுநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களில் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் சென்னை குடிநீர் வாரியம் இருந்து இரண்டு நாட்களில் இணைப்பு வழங்குகிறது. ஏழை, எளிய மக்களுக்கு இணைப்பு வழங்கப்படுவதில்லை. இதனைக் கேட்டால் மாமன்ற உறுப்பினரிடம் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கழிவுநீர் இணைப்பு வழங்க அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவுக்கு சாலை உடைக்கப்படுகிறது. மாநகராட்சி போடும் சாலைகளை உடைக்கும்போது, சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கவனத்திற்கு ஏன் கொண்டு வரக்கூடாது. அரசுக்கு நல்ல பெயர், கெட்ட பெயர் என்று இரண்டடையும் வாங்கித் தருவது அதிகாரிகள் தான். இதனை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்

சென்னையின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு வாசிகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கழிவுநீரை கால்வாயில் விடுகின்றனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்த சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் சிவமுருகன், “மாமன்ற உறுப்பினர் கூறியது போல ஏழை, எளிய மக்கள் குடிநீர் கழிவுநீர் இணைப்புகளை எந்தவித இடையூறும் இன்றி எளிதில் பெறுவதற்கு கொண்டு வரப்பட்ட திட்டம்தான் ‘அழைத்தால் இணைப்புத் திட்டம்’. மாமன்ற உறுப்பினர் கூறிய சிக்கல்கள் குறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனரிடம் ஆலோசனை நடத்தி, எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்த மாமன்ற கூட்டத்திற்குள் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.