ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதிமுக பங்கேற்கும் – வைகோ அறிவிப்பு!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை முன் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்ட முன் வரைவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழக அரசு உரிய விளக்கத்தை அளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தக்க காரணம் இன்றி ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில்தான் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது.

இதற்கு தமிழ்நாடு ஆளுநர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமான சூழலில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து டிசம்பர் 1ம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முன் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பங்கேற்கும். கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.