“எப்ப பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்ன்னு சொல்லாதீங்க..!” – திருச்சி மேயரிடம் கொதித்த கவுன்சிலர்கள்

திருச்சி மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்றைய தினம் மதியம் சுமார் 12.30 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் – அரியலூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருச்சி வந்து விமானம் மூலமாக சென்னை செல்லும்படி திட்டமிடப்பட்டு இருந்தது. அதனால் முதல்வரை வழியனுப்ப மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இப்படியான சூழலில் தான் காலை 10.30 மணியளவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூடியது. கவுன்சிலர்கள் எல்லாம் 10.30 மணிக்கு முன்னதாகவே, கூட்ட அரங்கிற்குள் வந்திருந்தனர். ஆனாலும், கூட்டம் தாமதமாகத் தான் தொடங்கியது. இது கவுன்சிலர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள்

குறிப்பாக திமுக கவுன்சிலரான முத்துசெல்வம், “முதலமைச்சர் இன்னைக்கு வர்றாங்க. இந்த சூழ்நிலையில் கூட்டம் முக்கியமா. பேச நிறைய இருக்குல்ல” என மேயர் அன்பழகனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதையடுத்து மேயர் அன்பழகன், “நான் சொல்றேன்ல உட்காருங்க. சீக்கிரமா முடிச்சிடலாம்யா” என்று கவுன்சிலர் முத்துசெல்வத்திடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதில் கடுப்பான கவுன்சிலர் முத்துசெல்வம், “வாயா போயான்னு எல்லாம் பேசாதீங்க. இன்னைக்கு கூட்டம் நடத்த வேணாம். நாளைக்கு வச்சிக்கலாம்” என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் கவுன்சிலரான சுஜாதா, “அரைமணி நேரத்துல கூட்டத்தை முடிச்சிடலாம்னா எப்படிங்க. 45 பொருளை வச்சிக்கிட்டு, விவாதம் பண்ணாம எப்படி கூட்டத்தை முடிக்க முடியும்” என எகிறினார். அதையடுத்து, `அமைச்சரை (கே.என்.நேரு) கேட்டுத் தான் கூட்டத்தை கூட்டுனேன்’ என்று மேயர் அன்பழகன் சொல்ல, கவுன்சிலர் முத்துசெல்வமோ, `ஏங்க நீங்க எப்ப பார்த்தாலும் அமைச்சர் அமைச்சர்ன்னு சொல்லாதீங்க. ஒன்பதரை மணிக்கு கூட்டத்தை வச்சிருக்கலாம்ல. முதல்வர் வர்றதை விட கூட்டம் ஒன்னும் முக்கியமானது இல்லை’ எனக் கொதித்தார். இந்தச் சம்பவத்தால் கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

மேயர் அன்பழகன்

அதையடுத்து, “மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள கூட்டத் தீர்மான பொருள்களில் எதற்கு ஆட்சேபனை  இருக்கிறதோ அவற்றை மட்டும் ஒத்திவைத்து விடுவோம். மற்ற பொருள்களை நிறைவேற்றிவிட்டுச் செல்லலாம். மக்கள் பணி எந்தவிதத்திலும் தடைபடக் கூடாது” என்றார் மேயர் கோரிக்கை வைத்தார். அதையடுத்து மாநகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 45 தீர்மானங்களில், 41 தீர்மானங்கள் மட்டுமே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்த நாளில், திருச்சி மாநகராட்சிக் கூட்ட அரங்கில் தி.மு.க., மேயரைக் கண்டித்து, தி.மு.க., கவுன்சிலர் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருத்துகளை முன்வைத்து காட்டமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒவ்வொரு முறையும் கவுன்சில் கூட்டத்தில் மேயர் அன்பழகனின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி எழுதுவதும், தி.மு.க., கவுன்சிலர்களே மேயர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.