கருணாநிதிக்கு கிடைக்காத படிப்பு உனக்கு கிடைக்க வேண்டுமென எம்.ஜி.ஆர் என்னை நன்றாக படிக்க சொன்னார் என ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அரங்கில் நடைபெறும், அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் – சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடு மற்றும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நூல் ஆகியவற்றை முதலமைச்சர் வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விழாவில் நான் பங்கேற்க முக்கிய காரணம் இந்த கல்லுரி மாணவிகள் நீங்கள் தான், அருகில் உள்ள அடையார் ஆலமரம் நான் நடை பயிற்சி செய்ய செல்வேன். அப்போது நான் இந்த வழியில் செல்லும் போது என் வாகனத்தை பார்த்து மாணவிகள் சத்தம் போடுவார்கள். அது சத்தம் இல்லை எனக்கான Positive Vibe. முதல் பெண் முதல்வர் யார் என்று பார்த்தால் ஜானகி அம்மா தான் அவர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
1952 – 72 வரை – எம்.ஜி.ஆர். திமுகவில் இயங்கி வந்தார். அதற்கும் முன் தேசிய கட்சியில் இருந்தவரை திராவிடம் பக்கம் இழுத்தவர் கருணாநிதி தான் என்று எம்.ஜி.ஆர் சொன்னார். ஜானகி அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி உருவாக உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி.
எம்ஜிஆர்-ஐ நினைவுகூர்ந்த முதல்வர்!
பள்ளி படிக்கும் போது இதே இடத்தில் பள்ளி நிதி பெற எம்.ஜி.ஆர். அவர்களை இதே சத்யா ஸ்டுடியோவில் சந்திக்க வந்திருக்கேன். அவ்வளவு ஏன் என்மேல் எம்.ஜி.ஆர். பாசம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர். படம் வெளியாகிறது என்றால் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன், அவரும் தொலை பேசியில் அழைப்பு விடுத்து எப்படி படம் இருந்தது என்று கேட்பார். என்னை நல்லா படி என்று அறிவுரை சொல்லி, கருணாநிதிக்கு கிடைக்காத கல்வி உனக்கு கிடைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உன் பெரியப்பா என்ற முறையில் இதை சொல்கிறேன் என்று எம்.ஜி.ஆர் எனக்கு அறிவுரை கூறினார்.
ஜானகி பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் – 6 மொழி தேர்ந்தவர், பாட கூடியவர், அவரே அவருக்கு ஒப்பனை செய்துகொள்வார். மருது நாட்டு இளவரசி என்ற படத்தில் கலைஞர் கதையில், எம்.ஜி.ஆர். ஜானகி நடித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டின் 3 முதல்வர் பணியாற்றிய படம் அது.
மேலும் சைகை மொழி பாடத்தை, பள்ளி கல்லுரியில் மொழி பாடமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை கல்லூரி சார்பில் கல்லுரி தாளாளர் லதா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை செயல் திட்டம் ஆக்குவோம் என்று முதல்வர் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
