கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: 49 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைமைக்கப்பட்டு உள்ளது.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு உயிர் இழந்தார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பிளவு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை தோட்டம்   நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் உள்ளது. இந்த  எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சயான், வாளையாா் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கைது செய்தனா். முன்னதாக கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கேரளாவிற்கு தப்பிச்செல்லும்போது நடந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சேலம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.  மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த கொலை கொள்ளை  தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை காவல் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. மேலும்  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகரும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக இருக்க கூடிய ஒருவருக்கு  இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினரும் சாட்சி அளித்துள்ளனர்.

இந்தநி லையில் கொடநாடு கொலை வழக்கில் சிபிசிஐடி டி எஸ் பி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.  இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையில்,  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி எஸ்பி சிஎஸ் மாதன் தலைமையில் 49 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறையில் இருந்து 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள். 36 காவலர்களும் உதவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை குழு குறித்த விவரங்களை டிசம்பர் 2-ல் உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.