ஜல்லிக்கட்டில் விதிமீறலும், கொடூரமும் இல்லை – உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் வாதாடுகையில், ‘பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக  ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்’ என்றார். 

இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த நீதிமன்றம் முன்னர் ஜல்லிக்கட்டில் இருக்கும் நடைமுறைகளை கொடூரம் என்றதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டே கொடூரமானது என கூறவில்லை.  தற்போது ஜல்லிக்கட்டுக்கென சட்டம் உள்ளது, உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படுகிறது. மேலும் தற்போது மனுதாரர் தரப்பு பல்வேறு விதிமீறல் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. இது விதிமுறைகளை முறையாக கட்டாயம் அமல்படுத்துவதில் ஏற்பட்ட தவறு மட்டுமே.  ஜல்லிக்கட்டு காளைகள் என்பது திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கான முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு  பயன்படுத்தப்படுகின்றன. 

நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக்கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவைதானே பயன்படுத்தப்படுகின்றன. போட்டிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் கண்களில் மிளகாய் பொடி தூவுதல் போன்றவை எல்லாம்தான் விலங்குகள் துன்புறுத்தலாக இருக்க முடியும். ஆனால், 1000 ஆண்டுகளாக காளைகளை வைத்து இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

இந்தப் போட்டிக்காக காளைகள் தனியாக பழக்கப்பட்டுவருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாக பயிற்சி அளிப்பதோடு, அந்த காளைகளை தங்கள் சொந்த குடும்ப உறுப்பினராகவே பாவிக்கின்றனர். ஆனால் காளைகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தற்போது அவ்வாறான எந்த விதிமீறலும் நடைபெறுவதாக தெரியவில்லை. இந்த போட்டிகளுக்கான விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதால் அதனை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல” என்றனர். இதனையடுத்து பீட்டா அமைப்பின் வழக்கறிஞர் ‘ஏற்கனவே இந்த நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஒரு பழக்கத்தை காட்டு மிராண்டித்தனம் என அறிவித்துவிட்டதால், அதனை மீண்டும் மாற்றி அமைக்கக்கூடாது’ என்றார். தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.