சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
அதன்பின்னர், “ஜானகி எம்ஜிஆர் சிறப்பு மலர், ஆவணப்பட குறுந்தகடு, பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் நூல்” உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:-
“நான் மாணவராக இருந்த போது பள்ளியில் நிதி பெருவதற்காக சத்திய ஸ்டுடியோவிற்கு எம்ஜிஆரை சந்திக்க சென்றேன். அதிலிருந்து என் மீது எம்ஜிஆர் அதிக பாசம் வைத்தார்.
தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. என்னதான் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினாலும் அவருடைய பங்களிப்பு அதிமுகவை விட திமுகவில் தான் அதிகம்.
அதுமட்டுமல்லாமல், ஜானகி அம்மையார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த கல்லூரிக்கு அனுமதி வழங்கியவர் கருணாநிதி தான். இந்த கல்லூரியை தொடங்கிய ஜானகி அம்மையார், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கியவர்.
அவருடைய முதல் படத்திற்கு கதை வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி தான், அவருடைய கடைசி படத்திற்கும் கதை வசனம் எழுதியதும் கலைஞர் கருணாநிதி தான். ஜானகி மட்டும் தான் எனது வாரிசு என்று உயில் எழுதி வைத்தவர் எம்ஜிஆர்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.