சேலம்: “கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. பிரபல பத்திரிகை ஒன்று, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “நேற்று அரியலூரில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். அதேபோல், பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில், தொழில்வளம் எதுவும் வரவில்லையென்று, அதனால் தமிழகம் ஏற்றம் பெறவில்லை என்ற கருத்தையும் அரசு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. ஒரு பிரபல பத்திரிகை, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஆய்வு செய்து, தமிழகம் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் எங்களுக்கு வழங்கப்பட்டது.
சட்டம் ஒழுங்கு முறையாக பேணி காக்கப்பட்டது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்துக் கொண்டிருந்தது. இன்றைய நிலை என்ன? 3 மாதங்களுக்கு முன்பு, சென்னை சுற்றுவட்டாரத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டு பத்ரிகைகளின் வாயிலாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். உடனே காவல்துறை அதிகாரிகள், 36 மணி நேரத்தில் 12 கொலைகள் தான் நடந்தன என்ற விவரத்தைச் சொன்னார்கள்.
36 மணி நேரத்தில் 12 கொலைகள் நடக்கிறதென்றால், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது, படுபாதாளத்துக்கு போய்விட்டது.
தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைக்கு திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின்போது , 2138 பேர் பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, முதல்வரே அறிவித்திருக்கிறார். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் வெறும் 148 பேர். அப்படியென்றால், மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை. சட்டமன்றத்திலேயே இதுகுறித்து நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால்தான் காவல்துறையால் போதைப்பொருட்களை தடை செய்ய முடியவில்லை” என்றார்.
முன்னதாக, நேற்று அரியலூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி.தனது கையில் அதிகாரம் இருந்தபோது – கைகட்டி வேடிக்கை பார்த்து -தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி – பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள் போய், யாரிடம், உங்களுக்கு தெரியும், பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.’உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே’ என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம். “புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ” என்று சொல்வார்களே, அதுபோல சிலர் “ஆபத்து – ஆபத்து” என்று அலறிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலருக்கு, ‘இருக்கும் பதவி நிலைக்குமா’ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்” என்று பேசியிருந்தார்.