திமுக செய்தி தொடர்பாளர்களுக்கு எதையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது-அண்ணாமலை

திமுகவை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக செய்தி தொடர்பாளர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது என டெல்லியில் அண்ணாமலை பேட்டியில் பேசியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.
அப்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து டெல்லி மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு பாஜக எடுத்து சென்றுள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. டெல்லி மாநகராட்சி வளர்ச்சி பணிக்காக வரவேண்டிய 32,000 கோடி ரூபாயை மாநில அரசு தடுத்து நிறுத்தியது.
image
அரவிந்த் கேஜ்ரிவாலின் மாயாஜாலத்தை கடந்த ஏழு வருடங்களாக டெல்லி மக்கள் பார்த்துள்ளனர். எங்கு பார்த்தாலும் குப்பை கிடங்காக உள்ள டெல்லியை சுத்தம் செய்து அப்புறபடுத்தும் முயற்சிகளை எடுத்த டெல்லி மாநகராட்சிக்கு மாநில அரசு எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. பிரச்சாரத்தில் காட்டும் ஆர்வத்தை டெல்லி வளர்ச்சி பணிகளில் கெஜ்ரிவால் காட்டவில்லை. டெல்லியில் உள்ள மகளிர்க்கு மட்டுமான சிறப்பு மருத்துவமனைக்கு செய்த செலவை விட கேஜ்ரிவால் சொந்த கட்சிக்காக விளம்பரம் செய்த செலவு அதிகம்.
திமுகவை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக செய்தி தொடர்பாளர்களுக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரியாமல் பேசுவது வாடிக்கையாக உள்ளது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள் பாதுகாப்பு பொறுப்பு மட்டுமே எஸ்பிஜி பிரிவின் கையில் உள்ளது. வெளிப்புறத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பும் மாநில அரசின் கையில் தான் உள்ளது. இது குறித்து தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்ட மனுவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் வருகையின் பொழுது பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து திருப்தி இல்லை என மாநில அரசே அவர்களின் எஸ்பி-யிடம் கூறியுள்ளனர்.
image
தமிழக அரசு தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. அவர்கள் ஒப்புக்கு சப்பானாக எந்த காரணங்களை சொன்னாலும் தமிழக மக்கள் , திராவிட முன்னேற்றக் கழகம் கொடுக்கும் எந்த காரணத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் முதலில் மாநில அரசு , எதுவுமே நடக்கவில்லை என கூறினார்கள். ஆனால் , தற்போது nia வின் டிஜிபி தமிழகத்தில் ஆய்வு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.