திருவண்ணாமலை மாவட்ட அருணாச்சலேஸ்வரர் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழக முழுவதும் பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இரண்டு வருட கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடைபெறுவதால் அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீப விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வரும் 6ம் தேதி திருவண்ணாமலைக்கு செல்ல உள்ளார். கார்த்திகை தீப தினமான டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் மாலை 6 மணிக்கு மகா தீப தரிசனம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் டிசம்பர் 5 அல்லது 6ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திருவண்ணாமலை செல்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.