பெங்களூரு, : பெங்களூரில் குற்றங்களை தடுக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
‘பாதுகாப்பான நகரம்’ என்ற முழக்கத்திற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காகவும், மத்திய அரசு, ‘நிர்பயா நிதி திட்டத்தை’ அறிமுகம் செய்தது.
இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு, சென்னை, டில்லி, மும்பை, கோல்ட்டா, ஹைதராபாத், ஆமதாபாத், லக்னோ நகரங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பெங்களூரு நகரின் 3,000 இடங்களில், 7,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.
இந்த கேமராவில், முகம், வாகன பதிவு எண், ஏ.என்.பி.ஆர்., என்ற தானியங்கி வாகன பதிவு எண் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால் படங்களை தெளிவாக பிடிக்கும்.
டெண்டர் மூலம் கேமரா பொருத்தவும், பராமரிக்கவும் ‘ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இக்கேமராக்களை, முக்கிய சாலைகளின் நடைபாதை, பேருந்து நிலையம், ஓய்வறை, பொது இடம், மைதானம், மத வழிபாட்டு மையங்கள் என பல இடங்களில் தனி கம்பங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இளம்பெண்களை கிண்டல் செய்வது, கடத்தல், தாக்குதல், திருட்டு என அனைத்து குற்றங்களும் கண்காணிக்கப்படும்.
நகர போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடத்தில் ‘கமாண்டோ மையம்’ உள்ளது. இங்குள்ள ஊழியர்கள், கண்காணிப்பு கேமரா மூலம் அந்தந்த இடங்களை தொடர்ந்து கண்காணிப்பர்.
கேமராவின் செயல்பாடு, அதன் மூலம் கண்டறியப்பட்ட வழக்குகள் குறித்து, அவ்வப்போது ஆய்வு நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பர்.
இதற்காக, இரண்டு ஆண்டுகளில், 496.57 கோடி ரூபாய் மதிப்பில், நகரில் 3,000 இடங்களில், 7,000 கேமராக்கள் பொருத்த ஒப்பந்தம் போடப்பட்டது.
நகரில் ஏற்கனவே, 1,500 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் அல்லது அசம்பாவிதங்கள் அல்லது குற்றங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட நிலையத்துக்கு மையத்தின் ஊழியர்கள் தகவல் தெரிவிப்பர்.
மேலும் ரோந்து பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பி வைக்கப்படுவர்.
சுரக் ஷா செயலி
பெண்களின் பாதுகாப்புக்காக, ஏற்கனவே ‘சுரக் ஷா’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் நகரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம், ‘ஆப்’ அல்லது கட்டுப்பாட்டு அறை எண் 100, 112 மூலம் உதவி கேட்கும் பெண்களின் இருப்பிடங்களை பார்க்கும் வகையில் இருக்கும்.
இது குறித்து, நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறுகையில், ”பெங்களூரில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பெண்கள், குழந்தைகள், முதியோரின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நிர்பயா திட்டத்தின் கீழ், நகரின் பல பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்