`போலீஸ் வேலை எனக்கு பொக்கிஷம்!’ – விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்

அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வரும் நிலையில் தன் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக நெகிழ்ந்துள்ளார் அவர்.

அமலாவை பாராட்டும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. கயல்விழி

தஞ்சாவூரை சேர்ந்தவர் அமலா (28). இவர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் விரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண கூடத்தில், கடந்த 8-ம் தேதி முதல்13-ம் தேதி வரை, தேசிய அளவில் விரல் ரேகை நிபுணர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 174 பேரும் தேர்வு எழுதினார்கள். அமலாவும் அந்த தேர்வில் கலந்து கொண்டார். தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அகில இந்திய அளவில் அமலா முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இதையடுத்து, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற அமலாவை நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

விரல் ரேகை நிபுணர் தேர்வில் வெற்றி பெற்ற அமலா

இதையறிந்த தமிழ்நாடு மற்றும் தஞ்சாவூர் காவல்துறையை சேர்ந்த பலரும் அமலாவை பாராட்டி வருகின்றனர். அமலாவால் தஞ்சாவூர் பெருமை அடைந்திருப்பதாகவும் கூறி வருகின்றனர். உற்சாகமாக இருந்த அமலாவிடம் பேசினோம்.

“எங்க அப்பா ஜெயராமன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெக்கார்டு கிளார்க் வேலை பார்த்தார். அம்மா ராணி தொடக்கப்பள்ளி ஆசிரியர். என் தங்கை காவியா பிஹெச்.டி படித்து வருகிறார். என்னோட கணவர் பிரகாஷ், தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார்.

என் தாத்தா சவரிமுத்து, தாய்மாமன்கள் ரெண்டு பேர் எங்க குடும்பத்துல போலீஸ் பணியில் இருந்தாங்க. அவர்களை பார்த்து வளர்ந்த எனக்கும் போலீஸாக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. சொல்லப்போனா நான் போலீஸ் ஆவதற்கு அவங்கதான் இன்ஸ்பிரேஷன். இந்நிலையில், எம்.எஸ்சி வேதியியல் பாடத்தில் பட்டம் பெற்ற நான் கடந்த 2019ம் ஆண்டு தஞ்சாவூரில் விரல் ரேகை பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தேன்.

எங்களுடைய ஏடி.எஸ்.பி ஹேமா மேடம், எல்லோரையும் உற்சாகப்படுத்தி வளர்ச்சியில் அக்கறை காட்டக் கூடியவர். இதற்கிடையில், என் அப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். எங்க வீட்ல நாங்க ரெண்டு பேருமே பெண் பிள்ளைகள் என்பதால் என்னோட கணவர் பிரகாஷ், தான் பார்த்த வேலையை உதறிவிட்டு என் அப்பாவை கவனித்துக் கொண்டார்.

ஆனாலும், கடந்த செப்டம்பர் மாதம் என் அப்பா இறந்துட்டார். அப்பா எங்களை விட்டுச் சென்றதை யாராலும் தாங்க முடியவில்லை. அப்பாவின் பிரிவு, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதிலிருந்து என்னால மீளமுடியலை. என்னை கவனித்த ஏடி.எஸ்.பி ஹேமா மேடம், `நீ அப்பா இழப்பிலிருந்து வெளியே வரணும். இயல்பிலேயே நல்லா படிக்கக்கூடிய நீ அகில இந்திய அளவில் நடைபெறும் விரல் ரேகை நிபுணர் தேர்வை எழுதணும்’ என்றதுடன் அதற்காக வழிகாட்டினார்.

அமலா குடும்பத்தினருடன்

ஏடி.எஸ்.பி ஹேமா மேம் உதவி ஆய்வாளராக இருந்தபோது, 2011-ல் நடந்த இதே தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காட்டிய அக்கறையில் தேர்வை எழுதிய நானும் முதலிடம் பிடிச்சிருக்கேன். ஹேமா மேடம், சக ஊழியர்கள், எனக்கான வேலையை உதறிய கணவர், என் குடும்பம் எனப் பலரும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறாங்க.

இந்த சந்தோஷமான நேரத்தில் அப்பா உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இன்னும் மகிழ்ச்சியா இருந்திருக்கும். அப்பா ஆசி எப்பவும் எனக்கு உண்டுனு என்னை நான் தேத்திக்கிறேன். என் கணவர் பிரகாஷ், டி.என்.பி.எஸ்.சி எழுத தயாராகி வர்றார்.

அமலா

என் வெற்றிக்கு பின்னால் கணவர் நின்னார். அவருடைய வெற்றிக்கு பின்னால் நான் இருக்கணும்னு நினைக்கிறேன். என் எக்ஸாம்க்கு ரிசல்ட் வந்திருக்க, டெல்லியில் நடக்க இருக்கிற ஷீல்டு கொடுக்குற விழாவிற்காக காத்திருக்கேன்.

எந்த மாநிலத்தை சேர்ந்தவங்க முதலிடம் பிடிக்கிறாங்களோ அவங்ககிட்ட இந்த ஷீல்டு ஒரு வருஷம் இருக்கும். 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த ஷீல்டு தமிழ்நாட்டுக்கு வர இருப்பதை எனக்கு கிடைத்த பெருமையா நினைக்கிறேன். இந்த நேரத்தில், இரண்டாம் இடம் பிடித்த, சென்னையில் யூனிட் 2-ல் உள்ள கார்த்திக் அழகர், மூன்றாம் இடம் பிடித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஆகியோருக்கும் வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன்.

போலீஸ் உதவி ஆய்வாளர் அமலா

தமிழ்நாடு மற்றும் தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்திருப்பதாக என்னை பலரும் பாராட்டுறாங்க. போலீஸ் வேலை எனக்கு பொக்கிஷம். இந்தப் பணியில் இன்னும் பல உயரங்களை தொடணும். எந்தச் சூழலிலும் தைரியமா, நேர்மையா, அறத்தை கைவிடாமல் பணியாற்றணும். அதுக்கு என் குடும்பமும், போலீஸ் குடும்பமும் எனக்கு உறுதுணையா இருக்கும்’’ என்று நெகிழ்ந்தார்.

வாழ்த்துகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.