பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி முகமது ஷரீக்கை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அதில் பயணித்த முகமது ஷரீக் (24) பலத்த தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள முகமது ஷரீக்குக்கு 8 பேர் அடங்கிய மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இருக்கிறார். இதனால் என்ஐஏ அதிகாரிகள் இன்னும் முகமது ஷரீக்கிடம் விசாரணை நடத்தாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷரீக்கை கொல்ல தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் உடல் நலம் தேறி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தால் தீவிரவாத அமைப்புகளின் தொடர்புகள் குறித்த தகவல் வெளியாகும் என்பதால் அந்த அமைப்பினர் இந்த சதிச் செயலை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதனால் முகமது ஷரீக் அனுமதிக்கப்பட்டுள்ள மங்களூரு தனியார் மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, மெட்டல் டிடெக்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் போலீஸார் சோதித்த பிறகே உள்ளே அனு மதிக்கின்றனர்.
மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு
இதேபோல அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். முகமது ஷரீக் விசாரணை அதிகாரிகளிடம் பேசினால் மட்டுமே மங்களூரு குண்டுவெடிப்பு, அதில் தொடர்புடையவர்கள் யார்? அவர்களின் இலக்கு என்ன என்பது குறித்து தெரியவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.