விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சிவகாசி மாநகராட்சியின் 5வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திரா தேவி “சிவகாசி மாநகராட்சியில் புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும் பெயர் மாற்றம் செய்வதற்கு விண்ணப்பித்த 5வது வார்டை சேர்ந்த 11 பேருக்கு ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விண்ணப்பதாரர்களிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர். எனவே எனது வார்டில் உள்ள மக்கள் கொடுத்த 11 விண்ணப்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்துள்ளேன். இந்த லஞ்சப்பனத்தை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அனைவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம்.
பின்னர் எனது வார்டு மக்கள் வழங்கிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என மாமன்ற கூட்டத்தில் பேசினார். திமுக கவுன்சிலரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த மேயர் சங்கீதா மனுக்கள் மீது அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் தவறு செய்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். திமுக கவுன்சிலர் லஞ்சம் கொடுப்பதற்கு பணத்துடன் வந்த நிகழ்வு மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.