கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதை முன்னிட்டு, முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் சட்ட நிபுணர்களுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகா – மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவிக்கு இரு மாநிலங்களும் பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடுகின்றன. பெலகாவி, தற்போது கர்நாடகா வசம் இருந்தாலும், அடிக்கடி இரு மாநில எல்லை பகுதிகளில் தகராறு ஏற்படுகிறது.
சமீபத்தில், மஹாராஷ்டிராவுக்கு சென்ற கர்நாடக அரசு பஸ்கள் மீது, அம்மாநிலத்தினர் சிலர் கற்கள் வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
பெலகாவியில் ஆய்வு
இதனால், இரு மாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ‘பெலகாவி எங்கள் மாநிலத்துக்கு தான் சொந்தம்’ என்று கூறியதும் பதற்றத்தை அதிகப்படுத்தியது.
மேலும், அம்மாநிலத்தின் மூன்று அமைச்சர்கள் டிசம்பர் 3ம் தேதி பெலகாவியில் ஆய்வு மேற்கொள்ள வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு மாநில எல்லை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடகா தரப்பில் எத்தகைய வாதங்களை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க, முதல்வர் பசவராஜ் பொம்மை டில்லியில் முகாமிட்டுள்ளார்.
டில்லியில் நேற்று, கர்நாடக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்தகியுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை இரண்டு மணி நேரம் நீடித்தது. கர்நாடக அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவடகி உடன் இருந்தார்.
பின், பசவராஜ் பொம்மை கூறியதாவது:
வழக்கறிஞர் முகுல் ரோஹத்தகிக்கு இரு மாநில எல்லை பிரச்னை குறித்து நன்கு தெரியும். உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பில், தெளிவான வாதங்களை எடுத்து வைத்து வாதாட தயாராக உள்ளோம்.
அனைத்து கட்சி கூட்டம்
மஹாராஷ்டிராவின், 42 கிராம மக்கள், கர்நாடகாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள், என்னை சந்தித்து ஆலோசிக்க நேரம் கேட்டுள்ளனர். இது குறித்து, அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும்.
கர்நாடக பஸ்கள் மீது கற்கள் வீசியது தொடர்பாக, மஹாராஷ்டிரா அரசு உயர் அதிகாரிகளுடன், கர்நாடக உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திஉள்ளனர்.
தற்போதைக்கு எல்லை பகுதியில் சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்தி, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கர்நாடகா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் திறமையான வாதங்கள் முன் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை, டில்லியில் முகாமிட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, மீண்டும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க தீர்மானித்துஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்