வேலைவாய்ப்பை முக்கிய பிரச்சினையாக அரசியல் கட்சிகள் ஏன் பேசுவதில்லை?

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது வருடம் 2 கோடி வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறினார். மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. தற்போது 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த 2 கோடி வேலை வாய்ப்புகள் குறித்து பாஜகவும், பிரதமர் மோடியும் பேசுவது இல்லை. சில நாட்களுக்கு முன்பு 2024 ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படும் மோடி அரசு அறிவித்தது. அடுத்த மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது என்பது இங்கே கவனிப்பட வேண்டியது.

ஒருபக்கம் வேலை வாய்ப்பு வாக்குறுதிகள் குறித்து பாஜகவும், பிரதமர் மோடியும் பேசுவது இல்லை. அவர்கள் ஆளும் கட்சியாக இருக்கிறார்கள். இது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளும் வேலை வாய்ப்புகள் குறித்து கேள்வியை பெரிதாக எழுப்பதில்லை. 

கொரோனா தொற்று தாக்கத்தை அடுத்து, உலகப் பொருளாதார மந்தநிலையை நோக்கி செல்கிறது. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்திகள் ஊடகங்களில் தினமும் காணலாம். வரவிருக்கும் பொருளாதார மந்தநிலை இந்தியாவை பாதிக்காது என பிரதமர் மோடியின் அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு உள்ளதா? என்பதை மக்கள் அறிதுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஏற்றுமதி அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்து வருகிறது, ரூபாய் வீழ்ச்சி நிலைமையை நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. இதன் காரணமாக, நிலுவைத் தொகையின் நிலைமை மோசமாகி வருவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வேலை வாய்ப்புகளும் மோசமாகப் பாதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஏற்கனவே 45 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. அதாவது மொத்தத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் அபாயகரமானதாகி வருவதை அனைத்து அறிகுறிகளும் காட்டுகின்றன. வேலை வாய்ப்பை எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். ஒரு முழு தலைமுறையினரின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது. நமது நாட்டின் மிக மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், இவ்வளவு ஆழமான நெருக்கடி இருந்தும், தேர்தல் நேரத்தில் கூட இது குறித்து விவாதம் நடக்காதது ஆழ்ந்த கவலையும் ஆச்சரியமும் அளிக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்தை குறித்தோ, வேலைவாய்ப்பின் பிரச்சினை குறித்தோ, பாஜகவின் வாக்குறுதிகள் பற்றியோ யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஆனால் எதிர்கட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? தற்போது சில மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கூட, வேலைவாய்ப்பு குறித்து பெரிதாக எந்த கட்சியும் பேசியதாகத் தெரியவில்லை. 

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை காரணமாக, வேலையில்லா திண்டாட்டம் ஏற்படலாம். பலரது வாழ்க்கை பாதிக்கப்படலாம். 2024 தேர்தலில் வேலை வாய்ப்பு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கும். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.