37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம்; திடீரென கதவை திறக்க முயன்ற பெண் கூறிய பகீர் காரணம்!

அமெரிக்காவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் செய்த செய்கையால், விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அந்தப் பயணியின் செயல் விமானத்தில் பயணித்தவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டிவிட்டது என்றுகூட கூறலாம்.

அதாவது கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸின் ஹூஸ்டனிலிருந்து கொலம்பஸ், ஓஹியோவுக்கு தென்மேற்கு விமானம் 192-ல் (Southwest Flight 192) சென்றுகொண்டிருந்தது.

விமானம்

அப்போது 37,000 அடி உயரத்தில் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பயணித்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண் திடீரென விமானத்தின் கதவை முறைத்துப்பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். இதனைக் கவனித்த விமான பணிப்பெண் ஒருவர் உடனடியாக அவரை ஓரமாக அழைத்துச்சென்று அமரவைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அந்த பெண், இன்னொரு விமான பணிப்பெண்ணிடம், `ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்க முடியுமா?’ என்று கேட்க, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என பணிப்பெண் மறுத்திருக்கிறார். ஆனால் அப்படிச்சொன்னதுமே அவர், பணிப்பெண்களைத் தள்ளிவிட்டுக்கொண்டு விமானத்தின் கதவை இழுக்க முற்பட்டார்.

விமானம்

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணியொருவர், அவர் கதவைத் திறக்க முயல்கிறார் எனக் கூச்சலிட்டு அவரை தடுக்க முயன்றார். இதில் அந்தப் பெண், தடுக்கவந்தவரைக் கடித்திருக்கிறார். தொடந்து அந்தப் பெண் தன் தலையை விமானத்தின் தரையில் தாமாகவே அடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து விமானம் அவசர அவசரமாக பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் (Bill and Hillary Clinton National Airport) தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்ட அடுத்த கணமே அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார்.

பெண் கைது

பின்னர் இது குறித்து ஆர்கன்சாஸின்(Arkansas) கிழக்கு மாவட்டத்துக்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், `இயேசுதான் ஓஹியோவுக்கு பறக்கச் சொன்னார். அவர்தான் விமானத்தின் கதவைத் திறக்கச் சொன்னார்’ என அந்தப் பெண்மணி கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் மேரிலாந்தில்(Maryland) உள்ள மத போதகரை (pastor) சந்திக்க விரும்புவதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.