ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் யாகசாலை அமைக்க எதிர்ப்பு: அகற்ற முயன்ற தி.வி.க-வினர் கைது!

ஈரோடு மாநகராட்சி வளாகத்திலுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற உள்ளது. கோயிலுக்குள் வரும் கூட்டத்தை சமாளிக்க போதுமான இடவசதி இல்லாததால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு முன்புறமுள்ள இடத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் அக்கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடப்பாரை, மண்வெட்டி, கம்பி போன்றவற்றை கையில் ஏந்தியவாறு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையை அகற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம்.

`யாக சாலையை அகற்றாவிடில், நாங்களே சென்று அகற்றுவோம்’ என்றும், `மதச் சார்பின்மையை கடைப்பிடிக்கும் திராவிட மாடல் அரசுக்கு இது களங்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது’ எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். பின்னர், யாக சாலையை அகற்றுவதாகக் கூறி அங்கிருந்து மண்வெட்டி, கடப்பாரையுடன் அவர்கள் செல்ல முயன்றனர்.  
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்துக்கு வந்த டவுன் டி.எஸ்.பி., ஆனந்த்குமார் தலைமையிலான போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரையும் கைதுசெய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். தற்போது அப்பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மண்வெட்டி, கடப்பாரையுடன் வந்த தி.வி.க-வினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில், “மாநகராட்சி வளாகத்தில் பல ஆண்டுகளாக உள்ள ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை அமைக்க இடம் கேட்டனர். கோயிலிலில் உள்ள மண்டபம் குறுகலாக இருப்பதால் அங்கு பக்தர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதால் மாநகராட்சி வளாகத்தில் யாக சாலை அமைப்பதற்கு இடம் அளிக்கப்பட்டது. இது தற்காலிகமானதுதான். விழா நிறைவடைந்ததும் இந்த யாகசாலை அகற்றப்பட்டுவிடும் என்பதால்தான் அனுமதி அளிக்கப்பட்டது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.