புனே: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும்.
இந்தக் கப்பலுடன் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் (என்டிஏ) 143-வது குழு பயிற்சியை முடித்துள்ளது. பயிற்சி முடித்தவர்களை கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் கூறியதாவது.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலுடன் விமானங்களை ஒருங்கிணைப்பது தொடர்பான சோதனை தொடங்கி உள்ளது. முதலில் போர் விமானம் இறங்கும் முறையை பரிசோதிக்க வேண்டும். இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்தப் பணிகள் முடிய 6 முதல் 8 மாதங்கள் ஆகும். இதன்படி அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் போர் விமானங்களை ஒருங்கிணைக்கும் பணி முடிவடையும் என எதிர் பார்க்கிறோம்.
கடற்படையில் ஆண், பெண் இருவரும் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், அதிகாரிகளாகவும் போர்ப்படை பிரிவில் வீராங்கனைகளாகவும் பெண்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இப்போது, பெண்களை மாலுமிகளாக சேர்க்கும் நடவடிக் கையை தொடங்கி உள்ளோம். இது மிகப்பெரிய சாதனை ஆகும். இப்போது 3 ஆயிரம் மாலுமி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக 82 ஆயிரம் பெண்கள் உட்பட மொத்தம் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு ஆர்.ஹரிகுமார் தெரிவித்தார்.