கும்பகோணம்: ராமேஸ்வரத்திலிருந்து காசி தமிழ்ச் சங்கமம் விழாவிற்கு செல்லும் ரயிலை மறியல் செய்வதாக வந்த தகவலையடுத்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை போலீஸார் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று இரவு காசிக்கு செல்லும் ரயில் புறப்பட்டு இன்று காலை 7:20 மணிக்கு கும்பகோணம் வந்து,பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலையில் காசிக்கு சென்றடைகிறது.
இந்த ரயிலில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறும் விழாவிற்காக கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு அந்நிகழ்ச்சிக்கு பொது மக்களை அழைத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த ரயிலை இந்திய மாணவர் சங்கத்தினர் மறியல் செய்வதாக கும்பகோணம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், பூரணி, ஜாபர் சித்திக் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு அந்த ரயில் வந்தவுடன் உள்ளே சென்று முழுவதுமாக போலீஸாரால் சோதனையிடப்பட்டது. சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் இல்லாததால் ரயில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.