புதுடெல்லி: குஜராத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தின்போது, தாஹோத் மாவட்டம், ரந்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது 3 வயது குழந்தை உட்பட7 பேர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் 2008-ல் தண்டிக்கப்பட்டபோது அமலில் இருந்த தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் இவர்களை விடுதலை செய்ய குஜராத் அரசு உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 15-ம்தேதி 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியது. அப்போது, “இவர்கள் 11 பேரும் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாலும் நன்னடத்தை காரணமாகவும் விடுதலை செய்யப்பட்டனர். 1992-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று குஜராத் அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தண்டனைக் குறைப்பின் கீழ் இவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு நேற்று வழக்கு தொடர்ந்தார்.
1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையை பயன் படுத்த, குஜராத் அரசை கடந்த மே மாதம் அனுமதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பில்கிஸ் பானு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன், பானுவின் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, “இரண்டு மனுக்களையும் ஒன்றாகவும், ஒரே அமர்வு முன்பும்விசாரிக்க முடியுமா என்பது குறித்து ஆராய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
கடந்த 2004-ல் 11 பேர் மீதான வழக்கை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. மும்பை சிபிஐ நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறியது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை இவ்வழக்கில் பொருந்தும் என்றும் அதை பின்பற்றியிருந்தால் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் பில்கிஸ் பானு தனது மனுவில் கூறியுள்ளார்.