சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் ’டபுள் டமாக்கா’ சுரங்கம்… தடபுடலாக ரெடியாகும் CMRL!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டு இந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3வது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோமீட்டர் தூரம் அமைகிறது.

ஓட்டுநர் இல்லாத ரயில்

இந்த வழித்தடத்தில் அடையாறு மற்றும் சேத்துப்பட்டு ஏரி ஆகியவற்றின் கீழ் இரட்டை சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. அதுவும் ஓட்டுநர்கள் இல்லாத ஆட்டோமேட்டிக் மெட்ரோ ரயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக சேத்துப்பட்டு ஏரியின் கீழிருக்கும் மண்ணை எடுத்து பரிசோதனை செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.

இரட்டை சுரங்கப் பாதைகள்

அதன்படி, சேத்துப்பட்டு ஏரியில் டிரில்லிங் செய்யும் கருவிகள் மிதந்தபடியே கொண்டு செல்லப்பட்டதை சமீபத்தில் பார்க்க முடிந்தது. அவர்கள் ஓரிடத்தில் நிலைநிறுத்திக் கொண்டு துளையிட ஆரம்பித்தனர். 35 மீட்டர் ஆழத்தில் இரண்டு போர்ஹோல்கள் போடப்பட்டு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை பரிசோதனை செய்யும் வேலைகள் தொடங்கியுள்ளன. இதை புவியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து எந்த வகையான மண்?

மண் பரிசோதனை

அதன் இழுவைத் தன்மை எப்படி இருக்கிறது? ஒருவேளை பாறையாக இருந்தால், அதன் தன்மைகள் என்னென்ன? உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பர். இதற்கான வேலைகள் அனைத்தும் ஆய்வகத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகளை அடிப்படையாக கொண்டு எந்தவிதமான இயந்திரங்களை துளையிட பயன்படுத்தலாம்? எத்தனை இயந்திரங்கள் தேவைப்படும்?

ஸ்கெட்ச் போட்ட CMRL

அதற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படுவர்? உள்ளிட்டவை பொறியாளர்களால் முடிவு செய்யப்படும். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், தற்போது சேத்துப்பட்டு ஏரியின் கீழ் மண் பரிசோதனை பணிகள் நடந்து வருகின்றன. இங்கு அமையும் ரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் குறித்து தெளிவான ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது.

சவாலான பணிகள்

கே.எம்.சி அருகில் 30 மீட்டர் ஆழத்திலும், சேத்துப்பட்டு அருகில் 22 மீட்டர் ஆழத்திலும் இரட்டை சுரங்கப் பாதை அமைகிறது. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அடையாற்றின் கீழ் துளையிடும் பணிகள் நடக்கும். சேத்துப்பட்டு பகுதியில் துளையிடுவதில் பெரிய சிக்கல் இருக்காது. ஏனெனில் இப்பகுதியில் இருக்கும் மண் Sandstone வகையை சேர்ந்தது.

அதுவே திருமயிலை அல்லது திருவான்மியூர் பகுதியில் பாறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் நீருக்கு அடியில் துளையிடுவது சிரமமான ஒன்று. ஏனெனில் அங்கு அழுத்தம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்தனர். முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் அரசு எஸ்டேட் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.