சேலம், ஏற்காட்டில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி

சேலம்: சேலம், ஏற்காட்டில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் குளிர் நிலவியது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுகிறது. சேலத்தில் இன்று காலை, வழக்கத்தை விட மிக அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது. சேலம் பை-பாஸ் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. இதனால், அனைத்து கனரக வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றன.

காலையில் கடும் குளிர் நிலவியதால், பள்ளிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகளும், வேலைக்கு புறப்பட்டவர்களும் கடும் அவதியடைந்தனர். பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் குல்லா அணிந்தபடி சாலைகளில் சென்றனர். காலை 10 மணி வரையில் சூரியன் தலை காட்டவில்லை. அந்த அளவிற்கு வானில் பனிமூட்டம் இருந்தது. இதேபோல், ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. இன்று காலையில் மேகங்கள் தவழ்ந்து செல்வது போல், பனிமூட்டம் மலைகளுக்கிடையே சென்றது. இந்த குளிரில், பனிமூட்டத்தை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

மலைப்பாதையில் அதிகளவு பனிமூட்டம் இருந்ததால், வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. ஏற்காடு படகு இல்லம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்து இயற்கை அழகை ரசித்தனர். இதமான சூழல் நிலவுவதால், வரும் நாட்களில் மிக அதிகபடியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.