மும்பையில், சாலையில் நேரலை செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபரை மானபங்கம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மையோசி இன். இவர், நேற்று (நவ.30-ம் தேதி) இரவு மும்பை புறநகர் பகுதியான கர் என்ற இடத்தில் நேரலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த இளைஞர் ஒருவர், அவருடைய கையை பிடித்து இழுத்துச் சென்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து “நோ.. நோ..” எனக்கூறிய மையோசியை அந்த இளைஞர் முத்தம் கொடுக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பி வந்த மையோசி நடந்து செல்லும் போது, மற்றொரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாகவும், வாகனத்தில் ஏறும்படி கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்து மையோசி நடந்து சென்றார். இது அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது.
இது தொடர்பாக மையோசி இன் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு நேரடியாக ஒளிபரப்பு செய்த போது, ஒருவர் என்னை துன்புறுத்தினார். அவர், நண்பருடன் இருந்ததால், பிரச்னையை பெரிதாகாமல் இருக்க முயற்சித்ததுடன் அங்கிருந்து வெளியேற முயன்றேன். அவர்களுடன் நெருங்கி பழகி, பேசியதால் தான் இப்படி நடந்ததாக சிலர் கூறுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ மும்பை போலீசாரின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து ‘பாலியல் துன்புறுத்தல்’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.