பார்ன் வீடியோவை ஊக்குவித்த ஆயிரக்கணக்கான கணக்குகள் நீக்கம்; ட்விட்டர் செய்த தரமான சம்பவம்!

குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் விரும்பத்தகாத நிர்வாண வீடியோக்களை பதிவிட்டிருந்த 44,611 இந்தியக் கணக்குகளை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். இது குறிப்பாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய செப்டம்பர் 26 – அக்டோபர் 25 க்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.
இந்தியாவில் இதுபோன்ற 52,141 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் ஆகஸ்ட் 26- செப்டம்பர் 25க்கு உட்பட்ட காலகட்டத்தில் ஏற்கனவே முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும், எலான் மஸ்க்கின் தலைமையிலான இந்த மைக்ரோ – ப்ளாக்கிங் தளமானது இந்தியாவில் தீவிரவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இயங்கிவந்த 4,014 கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவிலுள்ள ட்விட்டர் பயனர்களிடமிருந்து ஒரே நேரத்தில் 582 புகார்கள் பெறப்பட்டதாகவும், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ், 20 URLகள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் மாதாந்திர அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு முன்பே, ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 25 இடைபட்ட காலத்தில் ட்விட்டர் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து 157 புகார்களைப் பெற்று, அதன்கீழ் 129 URLகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தது. மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகள் குறித்து மேல் முறையீடு செய்த 61 கணக்குகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
image
இதற்குமுன்பு, குழந்தைகள் ஆபாசப் புகார்கள் குறித்து ட்விட்டரில் இருந்து பெறப்பட்ட பதில்கள் முழுமையடையவில்லை என்றும், அதில் ஆணையம் திருப்தி அடையவில்லை என்றும் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் குழந்தைகள் ஆபாச வீடியோ பதிவுகள் குறித்து ஏற்கனவே எலான் மஸ்க் தனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு புதிய ஐடி விதிமுறையானது, 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்கள், குற்றச்சாட்டுகள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.