போட்டோ ஷூட்டுக்கு தயாரான தம்பதி.. கோபத்தில் திமிறி எழுந்த கோயில் யானை! #வைரல் வீடியோ

குருவாயூர் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினரின் வீடியோ ஷூட்டின்போது, பின்னணியில் கிளர்ந்தெழுந்த யானை குறித்து தங்கள் வெட்டிங் வீடியோவிலேயே தம்பதியர் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது.
வெட்டிங் மோஜிடோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரால் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்கு நவம்பர் 10ஆம் தேதி புதுமண தம்பதியர் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த கோவில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓடியுள்ளனர்.
அந்த வீடியோவில், புதுமண தம்பதியர் கோவிலின் உள்முற்றத்துக்குள் போட்டோஷூட்டிற்காக செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு பின்னால் யானை நிற்கிறது. புகைப்பட கலைஞர் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கியவுடன், ஆத்திரமடைந்த யானை, பாகனை தாக்குகிறது. மேலும், பாகனை தனது தும்பிக்கையால் தூக்க முயற்சிக்கிறது. ஆனால் அந்த நபர் கீழே விழுந்துவிடுகிறார். கீழே விழுந்த அந்த நபர் உடனடியாக எழுந்து அங்கிருந்து தப்பி ஓடுகிறார். ஆனால் அவருடைய துணியானது யானையின் பிடியிலிருக்கிறது. அதற்குள் யானை மீது அமர்ந்திருந்த மற்றொரு பாகன், அதனை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து திசைமாற்றி அழைத்துச் செல்கிறார்.
இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த புதுமண தம்பதியர் தங்கள் திருமண வீடியோவில் அந்த சம்பவம் குறித்து பேசியுள்ளனர். ”நாங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென அங்கிருந்தவர்கள் கத்தி அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனது மனைவி எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டார்” என்று கூறியுள்ளார் மாப்பிள்ளை.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு யானை ஒன்று காட்டுப்பகுதியில் ஒருவரை மிதித்தே கொன்றது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.