மங்களூரு குக்கர் குண்டு வழக்கு என்.ஐ.ஏ.,விசாரணை துவக்கம்| Dinamalar

மங்களூரு :மங்களூரு ‘குக்கர்’ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக துவக்கினர்.

கர்நாடகா மாநிலம், மங்களூரில் உள்ள பம்ப்வெல் பகுதியில், கடந்த 19ம் தேதி, ஷிவமொகா தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முகமது ஷாரிக், 24, என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு கொண்டு சென்றபோது வெடித்தது. இதில், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம்,60, ஷாரிக் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

‘இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும்’ என, கர்நாடகஅரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி என்.ஐ.ஏ.,விடம் வழக்கை ஒப்படைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக விசாரணையை துவக்கினர். மூன்று குழுக்களாக மங்களூரு வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் சசிகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அவர்களிடம் குண்டு வெடிப்பு குறித்த தகவல்களை பெற்றுக் கொண்டனர்.இதற்கிடையே, மங்களூரு போலீசார் ஷாரிக்கிடம் மூன்று நாட்களாக விசாரணை நடத்தினர். அவரிடம், 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர். என்.ஐ.ஏ., அதிகாரிகளும் ஷாரிக்கிடம் நேற்று விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

ஷாரிக்குக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்துள்ளது. இந்த பணத்தை, அவர் மைசூரில் பலரின் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். இது தொடர்பாக, மங்களூரு போலீசார் மைசூரில் 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர். அவர்களிடமும் விசாரிக்க என்.ஐ.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.