உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் தனியார் விடுதியில் தங்கி, மாணவர் ஒருவர் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் (யுபிஇஎஸ்) முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். அதே விடுதியில் அவரின் கல்லூரி மாணவர்கள் சிலரும் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் பி.பி.ஏ படிக்கும் மாணவர், அவரின் அறையில் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரின் கல்லூரியில் படிக்கும் சீனியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் அவருடைய அறைக்கு மது பாட்டலுடன் சென்றிருக்கிறார்கள். அந்த மாணவர் அவர்களை வெளியே அனுப்ப முயன்றிருக்கிறார். ஆனாலும், அவர்கள் வெளியே செல்லாமல், அந்த மாணவரை மது குடிக்க வற்புறுத்தியிருக்கிறார்கள். அதை அந்த மாணவர் தடுத்தபோது, சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள், அந்த மாணவரை தாக்கி ரூ.60,000 கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், “என் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மற்றும் சீனியர்கள் என்னுடைய அறைக்குள் மதுபானத்துடன் நுழைந்து என்னை குடிக்க வற்புறுத்தினர். பின்னர் என்னைத் தாக்கி, ஆடையை கழற்றச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதை வீடியோவும் எடுத்தனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, “குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் அன்று இரவு பார்ட்டிக்குச் சென்று வந்திருக்கலாம். அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.
யு.பி.இ.எஸ் கல்லூரி நிர்வாக அதிகாரிகள், “பாதிக்கப்பட்ட மாணவர் ராகிங் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தச் சம்பவம் எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்திருக்கின்றனர்.