சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்கு வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதற்கு பதில் அளித்த அந்த நபர் சிறை துறையில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாலிபர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து அந்த வாலிபரை தேனாம்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் வாலிபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வாலிபரின் பெயர் வசந்த்குமார் என்பதும் இவர் பொள்ளாச்சி துணை சிறையில் உதவி துணை காவலர் பதவியில் இருந்து, தற்போது வார்டனாக பணிபுரிந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த வாலிபரிடம் தமிழ்நாடு காவல் துறை என்ற பெயரிலான போலி அடையாள அட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து புகைப்படம் எடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர் எதற்காக முதலமைச்சரை பார்க்க சென்றார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாகவும் அமைச்சரை சந்தித்தது பற்றியும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.